< Back
கிரிக்கெட்
ஸ்டீவ் சுமித் அதிரடி சதம்.. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்திய சிட்னி சிக்சர்ஸ்

image courtesy: twitter/@BBL

கிரிக்கெட்

ஸ்டீவ் சுமித் அதிரடி சதம்.. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்திய சிட்னி சிக்சர்ஸ்

தினத்தந்தி
|
11 Jan 2025 3:48 PM IST

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்டீவ் சுமித் தேர்வு செய்யப்பட்டார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஹென்ரிக்ஸ் தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ், ஆஷ்டன் டர்னர் தலைமையிலான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெர்த் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு தொடக்க வீரரான ஸ்டீவ் சுமித் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். பெர்த் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹென்ரிக்ஸ் 46 ரன்களும், துவாரசுயிஸ் 7 பந்துகளில் 23 ரன்களும் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிட்னி சிக்சர்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் சுமித் 121 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் அணியும் அதிரடியாக விளையாடியது. இருப்பினும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர வெற்றி பெற முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் வெற்றி பெற்றது.

பெர்த் தரப்பில் ஆஷ்டன் டர்னர் 66 ரன்கள் அடித்தார். சிட்னி தரப்பில் சீன் அபோட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டீவ் சுமித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்