< Back
கிரிக்கெட்
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இலங்கை வீரர்கள்... ஹெல்மெட்டை வீசிய விக்கெட் கீப்பர்.. என்ன நடந்தது..?
கிரிக்கெட்

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இலங்கை வீரர்கள்... ஹெல்மெட்டை வீசிய விக்கெட் கீப்பர்.. என்ன நடந்தது..?

தினத்தந்தி
|
5 Aug 2024 10:22 AM IST

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

கொழும்பு,

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்புறம் சுப்மன் கில் 35, விராட் கோலி 14, சிவம் துபே 0, ஸ்ரேயாஸ் ஐயர் 7, கேஎல் ராகுல் 0 ரன்களில் ஜெப்ரி வாண்டர்சே சுழலில் அவுட்டாகி இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் மிடில் ஆர்டரில் அக்சர் படேல் 44 ரன்கள் அடித்து போராடியும் 42.2 ஓவர்களில் 202 ரன்களில் ஆல் அவுட்டாகி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசி வெற்றி கண்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஜெப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த போட்டியில் விராட் கோலி 11 ரன்கள் எடுத்திருந்தபோது அகிலா தனஞ்செயா வீசிய பந்தில் எல் பி டபிள்யூ ஆனார். இதற்கு இலங்கை வீரர்கள் அவுட் கேட்க களத்தில் இருந்த நடுவரும் இதற்கு அவுட் வழங்கினார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத விராட் கோலி மூன்றாம் நடுவரின் உதவியை நாடினார். அப்போது டிஆர்எஸ்-ஐ பயன்படுத்தி இது அவுட்டா இல்லையா என பார்க்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்ட பிறகுதான் விராட் கோலியின் காலில் பட்டது தெரிந்தது. இதனால் மூன்றாம் நடுவர் இது அவுட் இல்லை என்றும் கள நடுவர் தனது முடிவை மாற்ற வேண்டும் என கூறினார்.

இதனை அடுத்து களத்தில் இருந்த நடுவர் இதை அவுட் இல்லை என்று மாற்றி உத்தரவிட்டார். இதனை இலங்கை வீரர்கள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விராட் கோலி அவுட் தான் என்றும் இதை எப்படி நீங்கள் நாட் அவுட் என்று கூறலாம் என கேப்டன் நடுவரிடம் முறையிட்டார். அதற்கு நடுவர் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதை ஆராய்ந்ததாகவும் பேட்டில் பந்து பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக கூறி விளக்கினார். எனினும் இதனை கொஞ்சம் கூட இலங்கை வீரர்கள் ஒப்புக் கொள்ளாமல் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் தன்னுடைய ஹெல்மெட்டை எடுத்து வீசி கோபத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் இதில் தப்பித்த விராட் கோலி சில ஓவர்களிலேயே 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

மேலும் செய்திகள்