சூதாட்ட புகாரில் சிக்கிய இலங்கை வீரர்... கெடு விதித்த ஐ.சி.சி... நடந்தது என்ன..?
|இலங்கை வீரர் பிரவீன் ஜெயவிக்ரமா சூதாட்ட புகாரில் ஆதாரத்துடன் சிக்கியதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
துபாய்,
இலங்கையை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரமா இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடைசியாக 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் விளையாடினார்.
இந்த சூழ்நிலையில் 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு தரகர்களால் ஜெயவிக்ரமா அணுகப்பட்டதை ஐ.சி.சி. கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக அந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் மற்றும் தாம் விளையாடிய சர்வதேச போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு அவரை தரகர்கள் அணுகியுள்ளனர்.
ஆனால் அதை உடனடியாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அல்லது ஐ.சி.சி.-யிடம் ஜெயவிக்ரமா தெரிவிக்கவில்லை. அத்துடன் தனது தவறை மறைப்பதற்காக சூதாட்ட தரகர்களுடன் மேற்கொண்ட உரையாடல் ஆதாரங்களை அவர் அழித்துள்ளார்.
அதை தற்போது ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ள ஐ.சி.சி. இது பற்றி ஆகஸ்ட் 6ஆம் தேதியிலிருந்து அடுத்த 14 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு ஜெயவிக்ரமாவுக்கு கெடு விதித்துள்ளது. அவரது கருத்தை கேட்ட பின் இதற்கான தண்டனைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
மேலும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயவிக்ரமா செய்த 3 தவறுகள் மற்றும் மீறிய விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
பிரிவு 2.4.4 - தேவையற்ற தாமதமின்றி எதிர்கால சர்வதேச போட்டிகளில் சூதாட்டத்தை மேற்கொள்ள அவர் பெற்ற அணுகுமுறையின் விவரங்களை ஊழல் தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்க தவறியது.
பிரிவு 2.4.7 - ஊழல் நடத்தையில் ஈடுபடுவதற்கான அணுகுமுறைகள் மற்றும் சலுகைகள் செய்யப்பட்ட செய்திகளை அழிப்பதன் வாயிலாக விசாரணையை தடுத்தது.
பிரிவு 1.7.4.1 மற்றும் 1.8.1 - சர்வதேச போட்டி கட்டணங்களுடன் இலங்கை பிரிமியர் லீக் கட்டணம் தொடர்பாகவும் ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.