< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிராக 27 வருட கால மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிராக 27 வருட கால மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

தினத்தந்தி
|
5 Aug 2024 9:05 AM IST

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

கொழும்பு,

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்புறம் சுப்மன் கில் 35, விராட் கோலி 14, சிவம் துபே 0, ஸ்ரேயாஸ் ஐயர் 7, கேஎல் ராகுல் 0 ரன்களில் ஜெப்ரி வாண்டர்சே சுழலில் அவுட்டாகி இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் மிடில் ஆர்டரில் அக்சர் படேல் 44 ரன்கள் அடித்து போராடியும் 42.2 ஓவர்களில் 202 ரன்களில் ஆல் அவுட்டாகி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசி வெற்றி கண்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஜெப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் தோற்றதால் 3-வது போட்டியில் வென்றாலும் இந்திய அணியால் இத்தொடரை சமன் மட்டுமே செய்ய முடியும். அதனால் 27 வருடங்களாக இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு தொடர்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி வந்த இலங்கை அந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

1997-க்குப்பின் இலங்கைக்கு எதிராக கடந்த 27 வருடங்களில் விளையாடிய அனைத்து இருதரப்பு தொடர்களிலும் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்