< Back
கிரிக்கெட்
இலங்கை அபார பந்துவீச்சு... நியூசிலாந்து 135 ரன்களில் ஆல் அவுட்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இலங்கை அபார பந்துவீச்சு... நியூசிலாந்து 135 ரன்களில் ஆல் அவுட்

தினத்தந்தி
|
9 Nov 2024 9:02 PM IST

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சக்கரி பவுல்கெஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 27 ரன் எடுத்தனர்.

தம்புல்லா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி தம்புல்லாவில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் ராபின்சன் மற்றும் வில் யங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டிம் ராபின்சன் 3 ரன்னிலும், வில் யங் 19 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து மார்க் சாம்ப்மென் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தனர்.

இதில் சாம்ப்மென் 1 ரன்னிலும், பிலிப்ஸ் 3 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து வீரர்கள் இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் பிரேஸ்வெல் 27 ரன்னிலும், ஜோஷ் கிளார்க்சன் 3 ரன்னிலும், சாண்ட்னெர் 16 ரன்னிலும், மிட்ச் ஹே ரன் எடுக்காமலும், இஷ் சோதி 10 ரன்னிலும், ஜேக்கப் டபி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

இறுதியில் நியூசிலாந்து 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 135 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சக்கரி பவுல்கெஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 27 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை ஆடி வருகிறது.

மேலும் செய்திகள்