பாகிஸ்தானில் கலவரம்: சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்து சொந்த நாடு திரும்பும் 'இலங்கை ஏ' வீரர்கள்
|பாகிஸ்தானில் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்து ‘இலங்கை ஏ’ வீரர்கள் சொந்த நாடு திரும்ப உள்ளனர்.
லாகூர்,
இலங்கை 'ஏ' கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. பாகிஸ்தானுக்கு சென்ற இலங்கை 'ஏ' அந்நாட்டு 'ஏ' அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது.
இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 'ஏ' 1-0 என்ற புள்ளிகளில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 'ஏ' அணி 1-0 என்ற புள்ளிகளில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவிருந்தது.
இதனிடையே, பாகிஸ்தானில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் இதில் போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கலவரம் பரவி வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை 'ஏ' அணி தனது பாகிஸ்தான் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு சொந்தநாடு திரும்ப உள்ளனர்.