2-வது டெஸ்டிலும் வெற்றி.. இலங்கையை ஒயிட்வாஷ் ஆக்கிய தென் ஆப்பிரிக்கா
|இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
கெபேஹா,
இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 358 ரன்களும், இலங்கை 328 ரன்களும் அடித்தன.
பின்னர் 30 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 317 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பவுமா 66 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் இலங்கைக்கு 348 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை நேற்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா, குசல் மென்டிஸ் தலா 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. வெற்றிக்கு 143 ரன்கள் தேவை என்ற நிலையில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு டி சில்வா 50 ரன்களும், குசல் மென்டிஸ் 46 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.
இதன் பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை 2-வது இன்னிங்சில் 238 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கேஷன் மகராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் ஆக்கியுள்ளது.