147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் அணியாக உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா
|வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
கயானா,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது.
அதன்படி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கயானாவில் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 160 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்களும் எடுத்தன. 16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 80.4 ஓவரில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் கைல் வெரின் மற்றும் மார்க்ரம் ஆகியோர் அரைசதம் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதைத்தொடர்ந்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 66.2 ஓவர்களில் 222 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 45 ரன்கள் அடிக்க, சிறப்பாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபடா மற்றும் கேஷவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகளும், டேன் பீட் மற்றும் வியான் முல்டர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
மேலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக கைப்பற்றுவது இது 10-வது முறையாகும். இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு அணிக்கெதிராக 10 தொடர்களை தொடர்ச்சியாக கைப்பற்றிய முதல் அணி என்ற உலக சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது. இதற்கடுத்த இடத்தில் இதே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா 9 வெற்றிகளுடன் உள்ளன.