விராட் கோலியை விமர்சித்தபோது கொலை மிரட்டல்கள் வந்தன - நியூ. முன்னாள் வீரர் திடுக் தகவல்
|விராட் கோலி குறித்து விமர்சித்தபோது அவருடைய ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக சைமன் டவுல் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
வெலிங்டன்,
இந்தியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்துள்ள அவர் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். அதேபோல ஐ.பி.எல். 8000+ ரன்களை அடித்த ஒரே வீரராக சாதனை படைத்துள்ள அவர் இந்த வருடம் கூட ஆரஞ்சு தொப்பியை வென்று அற்புதமாக செயல்பட்டார்.
முன்னதாக விராட் கோலி சுயநலத்துடன் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக விமர்சனங்கள் எழுவது வழக்கமாகும். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக விளையாடும் ஸ்டைலை கொண்டுள்ள அவர் கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி சுனில் கவாஸ்கர் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சிப்பது வாடிக்கையாகும்.
அந்த வரிசையில் இந்த வருடம் லக்னோவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 32 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். அதன்பின் மெதுவாக விளையாடிய அவர் அடுத்த 10 பந்துகளில் 8 ரன்கள் அடித்து 50 ரன்களை தொட்டார். அதை நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் நேரலையில் கடுமையாக விமர்சித்தார். அதற்கு விராட் கோலியின் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் விராட் கோலி குறித்து விமர்சித்தபோது அவருடைய ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக சைமன் டவுல் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "விராட் கோலி கிரிக்கெட்டில் மிகவும் வல்லவராக இருக்கிறார். தாம் ஆட்டம் இழந்து விடக்கூடாது என்று அவர் அதிகமாக கவலைப்படக்கூடிய வீரராக இருக்கின்றார். விராட் கோலி குறித்து நான் ஆயிரம் விஷயங்கள் பாராட்டிருக்கின்றேன். ஆனால் ஏதேனும் ஒரே ஒரு குறையோ அல்லது அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆதங்கத்தில் பேசினால் எனக்கு கொலை மிரட்டலை அவர்களது ரசிகர்கள் தருகிறார்கள்.
நான் விராட் கோலியை தனிப்பட்ட முறையில் என்றுமே பேசியதில்லை. நாங்கள் இருவரும் நல்ல உரையாடல்களை நடத்தி இருக்கின்றோம். நான் பலமுறை அவரை நேர்காணல் செய்திருக்கின்றேன். நாங்கள் கிரிக்கெட் குறித்து பல விஷயங்கள் பேசி இருக்கிறோம். விராட் கோலி மட்டுமல்லாமல் பாபர் அசாம் குறித்தும் நான் இதே விமர்சனத்தை வைத்திருக்கிறேன்" என்று கூறினார்.