ஆஸ்திரேலிய அணியில் விரிசல் என்ற உண்மையை கூறியதால் ஹேசில்வுட் நீக்கமா..? - கவாஸ்கர் விமர்சனம்
|இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஹேசில்வுட் விலகியுள்ளார்.
மும்பை,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது.
இதனிடையே பெர்த் டெஸ்ட் தோல்விக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட், அடுத்த போட்டியில் எப்படி மீண்டு வரப்போகிறீர்கள் என்ற கேள்வியை பேட்ஸ்மேன்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். இதன் மூலம் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் இடையே விரிசல் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்தன.
இந்த பேட்டியளித்த சில நாட்களிலேயே இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் விலகுவதாக ஆஸ்திரேலிய நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் முதல் போட்டியில் உண்மை நிலவரத்தை பேசியதற்காக ஹேசில்வுட்டை காயம் என்ற பெயரில் ஆஸ்திரேலியா கழற்றி விட்டுள்ளதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜோஸ் ஹேசில்வுட் பேட்டிக்குப்பின் ஆஸ்திரேலிய அணியில் பிளவு இருப்பதால் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பேசியது தெளிவாக தெரிந்தது. குறிப்பாக அவர் பேட்ஸ்மேன்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது சில நாட்கள் கழித்து ஹேசில்வுட் 2-வது போட்டியில் காயத்தால் விலகி உள்ளதாக தெரிகிறது.
சொல்லப்போனால் அவர் தொடர் முழுவதும் விலகுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. விசித்திரமான விஷயம் என்னவெனில் ஹேசில்வுட் அந்த பேட்டி கொடுத்த பின் இவ்வாறு நடந்தது என்பதை யாரும் கணிக்கவில்லை. எனவே இது மர்மமாக இருக்கிறது. கடந்த காலங்களில் இந்திய கிரிக்கெட்டில் இப்படி நடந்தது. இப்போது ஆஸ்திரேலிய அணியில் நடக்கிறது. அதை நான் நேசிக்கிறேன்" என்று கூறினார்.