கிரிக்கெட்
ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் சந்தேகம்...நடவடிக்கை எடுக்கப்படுமா...?

கோப்புப்படம்

கிரிக்கெட்

ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் சந்தேகம்...நடவடிக்கை எடுக்கப்படுமா...?

தினத்தந்தி
|
5 Nov 2024 3:03 PM IST

கவுன்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிய போது ஷகிப் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.

லண்டன்,

இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிவரும் வங்காளதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் சந்தேகத்திற்குரிய வகையில் பந்துவீசியதாக போட்டி கள நடுவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் டவுண்டனில் நடந்த சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிய ஷகிப் அல் ஹசன் மொத்தமாக 63 ஓவர்கள் பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் கள நடுவர்களான ஸ்டீவ் ஓ'ஷாக்னெஸ்ஸி மற்றும் டேவிட் மில்ன்ஸ் ஆகியோர் ஷகிப் அல் ஹசனின் பந்துவீச்சு சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக புகார் அளித்தனர்.

இதையடுத்து ஷகிப் அல் ஹசன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் தனது பந்துவீச்சை பகுப்பாய்வு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். தற்போது ஷகிப் அல் ஹசன் விளையாடுவதற்கு இன்னும் தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அவரது பந்துவீச்சு குறித்து சோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளாக விளையாடிவரும் ஷகிப் அல் ஹசன் இதுவரை இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கியது இல்லை. அவர் இதுவரை 447 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 712 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறுகையில்,

இந்தச் சம்பவத்தில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும் சர்வதேச கிரிக்கெட்டும் சம்பந்தம் இல்லை. இது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்புடையது. இதற்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்