< Back
கிரிக்கெட்
அந்த சூழ்நிலைகளில் சர்பராஸ் கான் கண்டிப்பாக தடுமாறுவார் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கவலை
கிரிக்கெட்

அந்த சூழ்நிலைகளில் சர்பராஸ் கான் கண்டிப்பாக தடுமாறுவார் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கவலை

தினத்தந்தி
|
23 Oct 2024 6:17 PM IST

ராகுலுக்கு பதில் சர்பராஸ் கான் அதிக வாய்ப்பு பெற வேண்டும் என்று பிராட் ஹாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிட்னி,

பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பண்ட் 99, சர்பராஸ் கான் 150 ரன்கள் அடித்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினர்.

குறிப்பாக சுப்மன் கில் காயமடைந்ததால் வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் முதல் இன்னிங்சில் டக் அவுட்டானார். ஆனால் அதே தவறை 2-வது இன்னிங்சில் செய்யாத அவர் தனது முதல் சதத்தை அடித்து 150 ரன்கள் குவித்து அசத்தினார். மறுபுறம் கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் 0, 12 ரன்கள் மட்டுமே அடித்து தோல்விக்கு முக்கிய காரணமானார்.

இந்த சூழ்நிலையில் சுப்மன் கில் காயத்திலிருந்து குணமடைந்து 2வது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக ராகுலை நீக்கி விட்டு சர்பராஸ் கானை பிளெயிங் 11-ல் சேர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளில் சர்பராஸ் கான் கண்டிப்பாக தடுமாறுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கவலை தெரிவித்துள்ளார். மேலும் ராகுலுக்கு பதில் சர்பராஸ் கான் அதிக வாய்ப்பு பெற வேண்டும் என்றும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடையவில்லையெனில் ராகுலுக்கு பதில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு துருவ் ஜுரேல் வாய்ப்பு பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சர்பராஸ் கான் பேட்டிங்கில் முன்னோக்கி நகர்வதில் எனக்கு கவலை இருக்கிறது. ஒருவேளை இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அவர் தடுமாறலாம். ஏனெனில் அவருடைய கைகள் பந்தை எதிர்கொள்ள மிகவும் கீழிருந்து வருகிறது.

அடுத்த போட்டியில் ராகுலுக்கு பதிலாக நான் சுப்மன் கில்லை கொண்டு வருவேன். ஏனெனில் அழுத்தத்தின் கீழ் 150 ரன்கள் அடித்த சர்பராஸ் கான் கிட்டத்தட்ட உங்களை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். எனவே அந்த வேகத்தை நீங்கள் அவருக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

ராகுல் தனக்கான வாய்ப்புகளைப் பெற்றிருந்தார். ஆனால் அவர் அதை சில போட்டிகளாக எடுத்துக் கொள்ளவில்லை. ரிஷப் பண்ட் பிட்டாக இல்லையெனில் அவர்கள் ஜுரேலை தேர்ந்தெடுப்பார்களா? அல்லது ராகுலை விளையாட வைப்பார்களா? நானாக இருந்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு பேக்-அப் விக்கெட் கீப்பரை நீண்ட கால திட்டத்திற்காக வளர்ப்பேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்