மீண்டும் மாயாஜாலம் காட்டிய சான்ட்னெர்.. 3-வது நாளிலேயே இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
|இந்த போட்டியில் சான்ட்னெர் மொத்தம் 13 விக்கெட்டுகளை (இரு இன்னிங்சிலும் சேர்த்து) வீழ்த்தி அசத்தியுள்ளார்.
புனே,
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் (6 ரன்), சுப்மன் கில் (10 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். அணியின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்தபோது சுப்மன் கில் (30 ரன்), இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதில் இருந்து இந்தியாவின் வீழ்ச்சி ஆரம்பமானது. ஆடுகளத்தில் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகாத நிலையில், நன்கு சுழன்று திரும்பியதால், சான்ட்னெர் விக்கெட் வேட்டை நிகழ்த்தினார்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 45.3 ஓவர்களில் 156 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் டாம் லாதம் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. சிறப்பாக விளையாடிய அவர் 86 ரன்களில் (133 பந்து, 10 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். முன்னதாக ரச்சின் ரவீந்திரா 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நேற்றைய முடிவில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 53 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்து மொத்தம் 301 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இருந்தது. விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் (30 ரன்), கிளென் பிலிப்ஸ் (9 ரன்) களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சுந்தர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்தியா 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் தனி ஆளாக போராட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. ரோகித் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். கில் தனது பங்குக்கு 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்களில் மீண்டும் சான்ட்னெர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்சை போலவே 2-வது இன்னிங்சிலும் மாயாஜாலம் காட்டிய நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளரான சான்ட்னெர் இந்தியாவின் விக்கெட்டை கொத்தாக கைப்பற்றினார். இறுதி கட்டத்தில் ஜடேஜா (42 ரன்கள்) போராடியும் பலனில்லை. முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் வெறும் 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் நியூசிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சாண்ட்னெர் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆரம்பத்திலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.