சஞ்சு சாம்சன்...திலக் வர்மா....யாருடைய இன்னிங்ஸ் சிறந்தது...? - சூர்யகுமார் அளித்த பதில்
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
ஜோகன்னஸ்பர்க்,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 109 ரன்களும், திலக் வர்மா 120 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 148 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது, சூழல் மற்றும் பிட்ச் இரண்டிற்கும் தகவமைத்து கொள்வதில் எந்த ரகசியமும் கிடையாது. எங்களின் திட்டம் தொடக்கத்தில் இருந்தே தெளிவாக இருந்தது.
கடந்த முறை தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது, இதே போன்ற ஸ்டைலில் தான் விளையாடினோம். அதனை அப்படியே தொடர வேண்டும் என்று நினைத்திருந்தோம். இந்தப் போட்டியில் எங்களின் பாசிட்டிவ் செயல்பாடுகளை தொடர வேண்டும் என்று நினைத்திருந்தோம். நிச்சயம் முடிவுகளை பற்றி எந்த சிந்தனையும் இல்லை. சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரின் பேட்டிங்கில் எந்த இன்னிங்ஸ் சிறந்தது என்று சொல்வது கடினமான ஒன்று.
ஆனால் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரின் பேட்டிங்கையும் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. அதேபோல் பவுலிங்கில் சொல்லி வைத்து வீழ்த்தி காட்டினார்கள். மைதானத்தில் வெளிச்சம் வந்த போது பிட்சில் நிச்சயம் ஸ்விங் இருக்கும் என்று கணித்திருந்தோம். ஏனென்றால் வானிலையில் சிறு மாற்றம் இருந்தது. அதனால் லைன் மற்றும் லெந்தில் கவனம் வைத்தோம். அதற்கான பலன்கள் கைமேல் கிடைத்தது. ஐ.சி.சி தொடரை வென்ற பின் மனதளவில் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தது. இந்த டி20 தொடரை பொறுத்தவரை சவால் நிறைந்த ஒன்று தான். அதனால் இந்த வெற்றி ஸ்பெஷலானது.
பயிற்சியாளர்களை பொறுத்தவரை முதல் நாளில் இருந்து எங்களின் ஷோ-வை மகிழ்ச்சியாக அமர்ந்து பார்க்கிறார்கள். எப்படி படம் காட்ட வேண்டும் என்று வீரர்களுடன் பேசுகிறார்கள். இன்றைய (நேற்று) ஆட்டத்திலும் கூட அவர்களின் மெசேஜ் ஒன்று தான். உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ, செய்யுங்கள் என்று நம்பிக்கையுடன் கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.