
Image Courtesy: IPL / @LucknowIPL
தோல்விக்கு பின்னர் 'டிரஸ்ஸிங் ரூமில்' வீரர்களுடன் உரையாடிய சஞ்சீவ் கோயங்கா - என்ன சொன்னார்..?

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின.
விசாகப்பட்டினம்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 209 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நிக்கோலஸ் பூரன் 75 ரன், மிட்செல் மார்ஷ் 72 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த டெல்லி 65 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களம் புகுந்த அசுதோஷ் சர்மா அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதியில் டெல்லி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்னும், விப்ராஜ் நிகாம் 15 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது அசுதோஷ் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் முடிந்த பின்னர் லக்னோ வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்ற அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது,
இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது. நான் அதை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடக்கும்.
நாம் ஒரு இளம் அணி. எனவே, நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த போட்டிக்கு நாம் தயாராகுவோம். அடுத்த போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால், இன்று ஏமாற்றமான முடிவு தான். எனினும் நல்ல போட்டியாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.