< Back
கிரிக்கெட்
சாம்சன் அதிரடி சதம்.. தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

image courtesy: twitter/@ICC

கிரிக்கெட்

சாம்சன் அதிரடி சதம்.. தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

தினத்தந்தி
|
8 Nov 2024 10:21 PM IST

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சாம்சன் 107 ரன்கள் குவித்தார்.

டர்பன்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டம் டர்பனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் -அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 7 ரன்களில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சூர்யகுமார் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் திலக் வர்மா களமிறங்கினார். சஞ்சு சாம்சன் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி அசத்தினார்.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 10 சிக்சர், 7 பவுண்டரிகள் உட்பட 107 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்பின் இறுதி கட்டத்தில் இந்திய அணியின் வேகம் குறைந்தது. திலக் வர்மா தனது பங்குக்கு 33 ரன்கள் அடித்து அவுட்டானார்.

பினிஷர்களான ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களிலும், ரிங்கு சிங் 11 ரன்களிலும் ஏமாற்றம் அளித்தனர். ஒரு கட்டத்தில் 230 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியை இறுதி கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கட்டுப்படுத்தியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க களமிறங்க உள்ளது.

மேலும் செய்திகள்