< Back
கிரிக்கெட்
சாய் சுதர்சன், பட்லர் போராட்டம் வீண்: குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி
கிரிக்கெட்

சாய் சுதர்சன், பட்லர் போராட்டம் வீண்: குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

தினத்தந்தி
|
25 March 2025 11:20 PM IST

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் - பஞ்சாப் அணிகள் மோதின.

அகமதாபாத்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சுப்மன் கில் - சாய் சுதர்சன் இணை முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் அடித்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. இதில் முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் 2-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த பட்லர் - சாய் சுதர்சன் இணையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இருவரும் இணைந்து அணியின் வெற்றிக்காக முழு முயற்சியுடன் போராடினர். 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.

சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே பட்லரும் (54 ரன்கள்) ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதோடு குஜராத் அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது. இறுதி கட்டத்தில் ஷெர்பேன் ரூதர்போர்ட் (46 ரன்கள்) போராடியும் பலனில்லை.

முடிவில் 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்