இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக சச்சினை நியமிக்க வேண்டும் - முன்னாள் வீரர் வலியுறுத்தல்
|இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக (0-3) இழந்தது. இதையடுத்து இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் 4 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கரை நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
ஆஸ்திரேலியாவில் நடக்கும் பார்டர்- கவாஸ்கர் கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் இருந்தால் அது அணிக்கு பெரிய அளவில் பலன் தரலாம். 2-வது டெஸ்டுக்கு முன்பாக நிறைய நாட்கள் உள்ளது. அத்துடன் இப்போது அணியில் ஆலோசகரை சேர்ப்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.