இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்ப ரோகித் அதை செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி ஆலோசனை
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
அடிலெய்டு,
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் (140 ரன்) சதத்தால் 337 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது.
இதனையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 36.5 ஓவர்களில் 175 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளரான கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் 19 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அதை 3.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தோல்வியிலிருந்து மீண்டும் இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்ப ராகுலுக்கு பதிலாக ரோகித் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- " ரோகித் தொடக்க ஆட்டக்காரராக விளையாட விரும்புகிறேன். அங்கேதான் அவரால் ஆக்ரோஷம் மற்றும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். மிடில் ஆர்டரில் விளையாடுவதால் அவருடைய ஆக்ரோஷம் கொஞ்சம் அடங்கி விட்டதாக நினைக்கிறேன். ரன்கள் எடுக்காததால் அது அவரிடம் போதுமானதாக இல்லை என்று நினைக்கிறேன். எனவே அவரை அதிக ஈடுபாட்டுடன் நான் பார்க்க விரும்புகிறேன்.
தற்போதைய நிலையில் இந்த தொடரில் மீண்டும் நீங்கள் வர முடியும் என்று நம்ப வேண்டும். கடந்த பத்து வருடங்களில் இந்த 2 அணிகளும் இப்படி ஒவ்வொரு போட்டியிலும் தோற்கடித்துக் கொள்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதாவது ஒன்றில் நீங்கள் தோற்றால் மற்றொன்றில் வெல்வீர்கள். எனவே அந்த நம்பிக்கை உங்களுக்கு வேண்டும். அதற்காக ராகுல் மிடில் ஆர்டருக்கு செல்ல வேண்டும். ஒருவேளை ரோகித் முதல் போட்டியில் விளையாடியிருந்தால் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடியிருப்பார்" என்று கூறினார்.