ரோகித் சர்மாவின் முடிவு உணர்வுபூர்வமானது - ரிஷப் பண்ட்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் அடித்துள்ளது.
கான்ஸ்டாஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். கவாஜா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பும்ரா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகியது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விஷயம் குறித்து பேசியுள்ள இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கூறியதாவது,
அவர் நீண்ட காலமாக எங்களுக்கு கேப்டன் ஆக இருந்து வந்த காரணத்தினால், இது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு முடிவாக இருக்கிறது. உண்மையில் நாங்கள் அவரை வெறும் கேப்டனாக மட்டும் பார்க்கவில்லை. அவரை நாங்கள் எங்களுடைய தலைவராக எப்பொழுதும் பார்த்து வருகிறோம். சில முடிவு எடுக்கும் இடங்களில் நீங்கள் கலந்து கொள்ள முடியாத இடங்களும் இருக்கின்றன.
அது அணி நிர்வாகம் எடுக்கும் முடிவுகள். நான் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே ரோகித் சர்மா விளையாடாதது ஏன்? என்ன காரணம்? என்று எனக்கு உண்மை தெரியாது. இதற்கு மேல் இந்த விஷயத்தை என்னால் விளக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.