தோனியிடம் இருந்து ரோகித் சர்மா இதை கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவுரை
|இந்தியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
பெங்களூரு,
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா வேகத்துக்கு சாதகமான பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்தது தடுமாற்றத்திற்கு காரணமானது.
இந்நிலையில், எதிரணியினர் சேதத்தை ஏற்படுத்தும் முன் பந்து வீச்சு மாற்றங்களை சரியாக செயல்படுத்துவதை தோனியிடம் இருந்து ரோகித் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
போட்டியில் தனது அணிக்கு ஏற்படும் பாதிப்பு கையை மீறி செல்லும் முன்பே, பவுலிங்கில் மாற்றம் கொண்டு வரும் தனித்துவமான திறனை எம்.எஸ்.தோனி கொண்டிருந்தார். அத்தகையை திறனை ரோகித் சர்மா தனது தலைமைப்பண்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.