< Back
கிரிக்கெட்
கே.எல். ராகுலுக்காக ரோகித் சர்மா அதை செய்திருக்கலாம் - இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி

image courtesy: AFP

கிரிக்கெட்

கே.எல். ராகுலுக்காக ரோகித் சர்மா அதை செய்திருக்கலாம் - இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி

தினத்தந்தி
|
23 Sept 2024 3:20 PM IST

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 376 ரன்களும், வங்காளதேசம் 149 ரன்களும் எடுத்தன. 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 4 விக்கெட்டுக்கு 287 ரன்களுடன் 'டிக்ளேர்' செய்து வங்காளதேசத்துக்கு 515 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணி 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 16 ரன்களில் அவுட்டான கே.எல். ராகுல், 2வது இன்னிங்சில் 22* ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆனால் அப்போது கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் கொஞ்சம் சுமாரான பார்மில் தடுமாறி வரும் கே.எல். ராகுல் அப்போட்டியில் 60 - 70 ரன்கள் அடித்த பின் கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்திருக்கலாம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நமக்கு 1 1/2 நாட்கள் மீதமிருந்தன. 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நீங்கள் பாலோ ஆனும் கொடுக்கவில்லை. மழையும் வரவில்லை. எனவே கே.எல். ராகுல் 60 - 70 ரன்களை அடிக்க நாம் அனுமதித்திருக்க வேண்டாமா? வாய்ப்பு இருந்ததால் நீங்கள் அதை கொடுத்திருக்கலாம். ஏனெனில் அது ஒட்டுமொத்த வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. அது உங்களுடைய பணிச்சுமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. அப்படி தாக்கம் ஏற்படாதபோது 22 ரன்களில் இருக்கும் ஒருவரை இன்னும் கால் மணி நேரம் விளையாட விட்டிருக்கலாம்.

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தார். ஆனால் போட்டி முடிந்த பின் 4வது நாளிலேயே வெற்றி பெறுவோம் என்பது தெரிந்திருந்தால் அப்போது டிக்ளேர் செய்திருக்க மாட்டேன் என்று டிராவிட் சொன்னார். அதற்காக இங்கே ராகுல் 195 ரன்களில் இருந்தார் என்று நான் சொல்லவில்லை. அவர் சச்சின் டெண்டுல்கரும் கிடையாது. இருப்பினும் அவரை நீங்கள் 6வது இடத்தில் விளையாட வைத்துள்ளீர்கள். பெரும்பாலும் அவரைப் போன்ற முழுமையான பேட்ஸ்மேன் 6வது இடத்தில் விளையாட மாட்டார்கள். எனவே அவரை இன்னும் கொஞ்சம் ரன்கள் அடிக்க அனுமதித்து இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். அது இந்திய அணியின் வெற்றியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்காது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்