ஓய்வுக்கு பிறகு ரோகித் ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம் - ஆஸி.முன்னாள் வீரர் கிண்டல்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து ரோகித் விலகினார்.
சிட்னி,
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன் கடைசி போட்டியில் மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில், பும்ரா கேப்டனாக செயல்பட்டார். மோசமான பார்ம் காரணமாக ரோகித் தாமாக முன்வந்து இந்த போட்டியிலிருந்து ஓய்வு எடுத்ததாக கூறப்பட்டது.
முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் தலைமையில் விளையாடிய அதற்கடுத்த 3 போட்டிகளில் 2-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டது. அதற்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அதன் காரணமாக ஓய்வு பெறுமாறு இந்திய ரசிகர்களே அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். அந்த நிலையில் அணியின் நலனுக்காக 5-வது போட்டியில் ரோகித் சர்மா தாமாகவே விலகிக் கொண்டார்.
இதனால் இந்த தொடர் முடிந்தவுடன் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று கருத்துகள் நிலவின. ஆனால் தான் இப்போதைக்கு ஓய்வை அறிவிக்கும் எந்த ஒரு முடிவையும் எடுக்கப்போவது இல்லை, கடைசி போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன் என்று ரோகித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சைமன் கேட்டிச் கூறுகையில், "ரோகித் சர்மா இன்னும் ரன்கள் எடுக்கும் பசியுடன்தான் விளையாடப் போகிறாரா? என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது என்பது எளிதாக இருக்காது.
இங்கிலாந்து அணியிலும் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துவிட்டார்கள். கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். எனவே என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட முடிவு செய்தால் அது நிச்சயம் அவரது கெரியருக்கு கடினமான தொடராக அமையலாம். ரோகித் சர்மா பேசுவதை வைத்து பார்க்கும்போது அவர் ஓய்வுபெற்ற பிறகு ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம்" என்று கிண்டலடித்தார்.