< Back
கிரிக்கெட்
அஸ்வின் ஓய்வு பெற ரோகித், கம்பீர்தான் காரணம் - பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்

image courtesy: PTI

கிரிக்கெட்

அஸ்வின் ஓய்வு பெற ரோகித், கம்பீர்தான் காரணம் - பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்

தினத்தந்தி
|
19 Dec 2024 8:39 PM IST

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு அறிவித்துள்ளார்.

லாகூர்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை நேற்று அறிவித்தார். சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

டெஸ்டில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற பெருமைக்குரிய அவர் ஒட்டுமொத்தத்தில் 7-வது இடத்தில் உள்ளார். அத்துடன் 6 சதம், 14 அரைசதத்துடன் 3,503 ரன்களும் எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவின் ஆட்ட நாயகன் (மேட்ச் வின்னர்) அல்ல தொடர் நாயகன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட அஸ்வின் இப்படி ஓய்வு பெறுவதற்கு கேப்டன் ரோகித் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் தவறாக முடிவுதான் காரணம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அஸ்வின் செய்தியாளர்கள் சந்தித்ததை நானும் பார்த்தேன். அவர் ஓய்வு பற்றி அதிகமாக பேசியதாக தெரியவில்லை. ஒருவேளை விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் அஸ்வினை இப்படி பாதி தொடர்களிலேயே ஓய்வு பெற விட்டிருக்க மாட்டார் என்று உறுதியாக சொல்வேன். ஒன்று நியூசிலாந்து தொடரில் தமக்கு முன்பாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்ட போதே அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

அல்லது 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் முடிந்த பின் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் பாதியில் ஓய்வை அறிவிக்க அனுமதித்தது ரோகித் மற்றும் கம்பீரின் மோசமான முடிவு. அவர்கள் அஸ்வினுடன் அமர்ந்து அடுத்த 2 போட்டிகளில் நீங்கள் இந்தியாவுக்கு தேவை என்று பேசியிருக்க வேண்டும்.

ஆம் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அசத்தவில்லை. ஆனால் அவர் ஒரு போட்டியில் மட்டும் அசத்தக்கூடியவரா? அஸ்வின் ஆட்ட நாயகன் கிடையாது. தொடர் நாயகன். தொடர்ச்சியாக தொடர்களை வென்று கொடுக்கக்கூடிய ஒருவர் மேட்ச் வின்னராக இருப்பதை விட வித்தியாசமானவர்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்