டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக ரோகன் ஜெட்லி மீண்டும் தேர்வு
|டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக ரோகன் ஜெட்லி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், மக்களவை எம்.பி.யுமான கிர்த்தி ஆசாத்தை தோற்கடித்த ரோகன் ஜெட்லி, டெல்லி மற்றும் மாவட்ட சங்கத்தின் (டிடிசிஏ) தலைவராக தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரோகன் ஜெட்லி 1,577 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கீர்த்தி ஆசாத் 777 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
35 வயதான ரோகன் ஜெட்லி முன்னாள் மத்திய மந்திரியும், 14 ஆண்டுகள் டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தவருமான அருண் ஜெட்லியின் மகன் ஆவார். துணை தலைவராக ஷிகா குமாரும், செயலாளராக அசோக் ஷர்மாவும், பொருளாளராக ஹரிஷ் சிங்லாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.