< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை பைனலை நினைவில் வைத்துக்கொண்டு போராடினோம் - சூர்யகுமார் யாதவ்

image courtesy: AFP

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை பைனலை நினைவில் வைத்துக்கொண்டு போராடினோம் - சூர்யகுமார் யாதவ்

தினத்தந்தி
|
28 July 2024 7:56 AM IST

இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

பல்லகெலே,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி பல்லகெலேயில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் வலுவான தொடக்கம் தந்தனர். 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கில் 34 ரன்களிலும் (16 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜெய்ஸ்வால் 40 ரன்களிலும் (21 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தனர்.

அடுத்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் - விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 214 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பதும் நிசாங்காவும், குசல் மென்டிசும் அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து வலுவான அஸ்திவாரம் அமைத்தனர். இதில் குசல் மென்டிஸ் 45 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் இந்திய அணிக்கு கடும் சவால் அளித்து வந்த பதும் நிசாங்கா 79 ரன்களில் அக்ஷர் படேலின் சுழலில் சிக்கினார்.

இதன் பின்னே இந்தியா நிம்மதி பெருமூச்சி விட்டது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். இதனால் இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அந்த அணி கடைசி 30 ரன்களுக்கு மட்டும் 9 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப்சிங், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த வெற்றிக்கு 58 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் சூர்யகுமார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் இப்போட்டியில் பனி வராதது தங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்ததாக சூர்யகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதை விட 140/1 என இலங்கை வலுவான நிலையில் இருந்தபோது டி20 உலகக்கோப்பை பைனலை நினைத்துக் கொண்டே போராடி வென்றதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "முதல் பந்திலிருந்தே இலங்கை நன்றாக விளையாடினர். அவர்கள் தொடர்ந்து வேகத்தை பின்பற்றினர். இந்த பிட்ச் இரவு நேரத்தில் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். அதிர்ஷ்டவசமாக இங்கே பனியும் இல்லை. உலகக்கோப்பையில் நாங்கள் விளையாடிய விதம் இந்தப் போட்டியில் எதிரணி முன்னிலையில் இருந்தும் வெற்றி இன்னும் தூரத்தில் இருக்கிறது என்பதை எங்களுக்கு நினைவுப் படுத்தியது. அணியின் வெற்றிக்கு எது வேலை செய்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் நாங்கள் இடது - வலது கை ஜோடி பற்றிய முடிவெடுப்போம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்