அஸ்வினையே மன்கட் செய்து விடுவேன் என எச்சரித்த நெல்லை அணியின் பவுலர்... வீடியோ வைரல்
|அஸ்வினையே மன்கட் செய்து விடுவேன் என்று தமிழக வீரர் பிரசாந்த் எச்சரித்தது வைரலாகி வருகிறது.
திண்டுக்கல்,
நடப்பு டி.என்.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் திண்டுக்கல் நிர்ணயித்த 137 ரன் இலக்கை நெல்லை அணி 17.5 ஓவர்களில் விரட்டிப்பிடித்தது. அருண் கார்த்திக் 45 ரன்னும், அஜிதேஷ் 43 ரன்னும் எடுத்தனர். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட நெல்லைக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது.
முன்னதாக இப்போட்டியில் திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தபோது ரவிச்சந்திரன் அஸ்வின் 15வது ஓவரில் எதிர்புறம் (நான் ஸ்டரைக்) இருந்தார். அந்த ஓவரை வீசிய நெல்லையின் மோகன் பிரசாந்த் ஒரு பந்தில் பந்து வீசுவதை நிறுத்தி விட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேற முயற்சித்ததற்காக மன்கட் செய்து விடுவேன் என்று எச்சரித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
ஏனெனில் 2019 ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட்டாக்கிய அஸ்வினின் செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசு பொருளானது. ஆனால் விதிமுறைக்கு உட்பட்டே செயல்பட்டதாக தெரிவித்த அவர் அனைவரும் மன்கட் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்படிப்பட்ட அஸ்வினையே இப்போட்டியில் மன்கட் செய்து விடுவேன் என்று தமிழக வீரர் பிரசாந்த் எச்சரித்தது வைரலாகி வருகிறது.