< Back
கிரிக்கெட்
முகத்தில் அடித்த பந்து.. ரத்தத்துடன் கதறிய ரவி பிஷ்னோய்.. என்ன நடந்தது?
கிரிக்கெட்

முகத்தில் அடித்த பந்து.. ரத்தத்துடன் கதறிய ரவி பிஷ்னோய்.. என்ன நடந்தது?

தினத்தந்தி
|
28 July 2024 10:54 AM IST

இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

பல்லகெலே,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி பல்லகெலேயில் நேற்று நடந்தது. இதில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் பதிரானா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணி பவுலர்கள் விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அப்போது சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் நிசாங்கா 48 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதே ஓவரின் கடைசி பந்தில் குசால் பெரேராவும் 20 ரன்களில் வெளியேற, இலங்கை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை குவித்திருந்தது.

இதன்பின் 16வது ஓவரை வீச ரவி பிஷ்னோய் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்தில் கமிந்து மெண்டிஸ் அடித்த ஷாட் பவுலரான ரவி பிஷ்னாய்-க்கு அருகில் சென்றது. அதனை கேட்ச் பிடிக்க முயன்ற ரவி பிஷ்னாய் ஒரு கையால் கிட்டத்தட்ட பிடித்துவிட்டார். ஆனால் கேட்ச் பிடித்துவிட்டு கீழே விழுந்தபோது கையில் இருந்த பந்து எகிறியது. அதுமட்டுமல்லாமல் அந்த பந்து ரவி பிஷ்னாய் இடது கண்களுக்கு கீழ் பலமாக அடித்து சென்றது. இதனால் ரவி பிஷ்னாய் கண்களுக்கு கீழ் உடனடியாக ரத்தம் வெளியேறியதால், பிட்சிலேயே கதறினார்.

முகத்தில் பந்து அடித்த வேகமும் கூடுதலாக இருந்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டு உடனடியாக பிசியோ பிட்சிற்கு சென்றார். அதன்பின் ஐஸ் பேக் வைத்து கண்களுக்கு கீழ் சிகிச்சை செய்த நிலையில், பேண்ட்-ஐட் ஒன்றை ஒட்டினார். அதன்பின் ரவி பிஷ்னோய் பார்வையில் பிரச்சனையில்லை என்பதை உறுதி செய்த பின், ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இதன்பின் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில், கடைசி பந்தில் அசலங்காவின் விக்கெட்டை எடுத்து ரவி பிஷ்னாய் பதிலடி கொடுத்தார்.

மேலும் செய்திகள்