< Back
கிரிக்கெட்
ரஷித் கான் அபார பந்துவீச்சு... ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்

Image Courtesy: @ACBofficials

கிரிக்கெட்

ரஷித் கான் அபார பந்துவீச்சு... ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்

தினத்தந்தி
|
6 Jan 2025 5:27 PM IST

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

புலவாயோ,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2-வது டெஸ்ட் புலவாயோவில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதன் முதல் இன்னிங்சில் முறையே ஆப்கானிஸ்தான்157 ரன்களும், ஜிம்பாப்வே 243 ரன்களும் அடித்தன. பின்னர் 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து திண்டாடியது.

இந்த இக்கட்டான சூழலில் ரஹ்மத் ஷா மற்றும் இஸ்மாத் ஆலம் பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் தனது 2வது இன்னிங்சில் 363 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மத் ஷா 139 ரன், இஸ்மாத் ஆலம் 101 ரன் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே நேற்றைய 4ம் நாள் முடிவில் 66 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்திருந்தது. ஜிம்பாப்வே தரப்பில் கிரேக் எர்வின் 53 ரன்னுடனும், ரிச்சர்ட் ங்க்வாரா 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 73 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஜிம்பாப்வேவும், 2 விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தானும் களம் கண்டன. இன்று 2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே மேற்கொண்டு ரன் எடுக்காமல் 205 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 72 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது.

மேலும் செய்திகள்