ரஞ்சி டிராபி; மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட பிரித்வி ஷா - சுனில் கவாஸ்கர் விமர்சனம்
|ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றிருந்த பிரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மும்பை,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் மும்பை அணி தான் மோதிய 2 போட்டிகளில் 1 தோல்வி, 1 வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து 3-வது போட்டியில் திரிபுரா அணியுடன் ஆடி வருகிறது. இந்நிலையில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த பிரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் (பிரித்வி ஷா) அதிக எடையுடன் இருப்பதாலும், வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் கூறி அவரை அணியில் இருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மும்பை அணியில் பிரித்வி ஷா நீக்கப்பட்ட முடிவை இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரஞ்சிக் கோப்பையில் நடப்பு சாம்பியன் மும்பை அணி திரிபுரா அணிக்கு எதிரான தங்களுடைய போட்டியிலிருந்து பிரித்வி ஷா நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ரஞ்சி அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு கலவையான காரணங்கள் செய்திகளாக காணப்படுகின்றன.
ஒருவேளை அது அணுகுமுறை, நன்னடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தால் அதை புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் அவருடைய எடை காரணமாக நீக்கப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஏனெனில் அவரின் உடலில் 35 சதவீதம் கொழுப்பு இருப்பதாலேயே நீக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரிந்துரைக்கிறது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூரு டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் ஆட்டத்தை நாம் பார்த்தோம்.
அவருடைய உடல் எடை மற்றும் வடிவம் பற்றி பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் 150 ரன்கள் அடித்த அவர் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு பிட்னஸ், மெலிதான இடுப்பு மட்டுமே தேவையில்லை என்பதை காண்பித்தார். எனவே ஒரு வீரர் 150+ ரன்கள் அடித்தால் அல்லது ஒரு நாளில் 20 ஓவர் வீசினால் அதையே நாம் பிட்னஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பிரித்வி ஷா போன்ற உடலமைப்பை கொண்டுள்ள எத்தனை பேர் 379 ரன்கள் அடித்துள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.