இந்திய அணியில் புஜாரா, ரகானே இடங்களை அந்த 2 வீரர்களால் நிரப்ப முடியும் - தினேஷ் கார்த்திக்
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.
லாகூர்,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
இருப்பினும் இம்முறை ரகானே மற்றும் புஜாரா இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று சில முன்னாள் ஆஸ்திரேலிய தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் 2018 - 19 தொடரில் அதிக ரன்கள் குவித்த புஜாரா தொடர்நாயகன் விருது வென்று ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
மறுபுறம் 2020 - 21 தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற ரகானே மெல்போர்னில் சதமடித்து அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழி நடத்தி 2 - 1 (4 போட்டிகள்) என்ற கணக்கில் கோப்பையை வெல்ல உதவினார். இருப்பினும் அதன் பின் சுமாராக விளையாடியதால் அவர்களை பிசிசிஐ கழற்றி விட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் ரகானே மற்றும் புஜாரா ஆகியோரின் இடத்தை சர்பராஸ் கான், சுப்மன் கில் ஆகியோர் நிரப்பும் தகுதியைக் கொண்டுள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "சர்பராஸ் கான், சுப்மன் கில். இந்த 2 பேட்ஸ்மேன்களுமே இந்த வருடம் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் சிறப்பாக விளையாடினர். எனவே அவர்கள் ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அங்கே அவர்களால் ரகானே மற்றும் புஜாரா இடங்களை நிரப்ப முடியுமா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த இடங்களை நிரப்புவது மிகவும் கடினம். இருப்பினும் அதை செய்வதற்கான தகுதி அவர்களிடம் உள்ளது" என்று கூறினார்.