சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு - மதீஷா பதிரனா
|சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு என மதீஷா பதிரனா கூறியுள்ளார்.
கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி சரித் அசலங்கா தலைமையில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக ஆடும் மதீஷா பதிரனா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் குறித்து பதிரனா சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இது ஒரு நல்ல சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியா ஒரு புதிய பயிற்சியாளர் மற்றும் சில புதிய வீரர்களுடன் வருகிறது. மேலும், அவர்கள் உலக சாம்பியன்கள் என்பதால் இது எங்களுக்கு ஒரு நல்ல சவாலாக இருக்கும். எங்களிடம் நல்ல திறமையான வீரர்கள் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் டி20 உலகக்கோப்பையில் நன்றாக செயல்படவில்லை.
ஆனால் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றால் அது எங்களது நம்பிக்கையை அதிகரிக்கும். 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடருக்கு பிறகு இலங்கை அணியில் எனக்கு அதிகமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு தொடரிலும் நான் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தேன்.
ஆனால் ஐ.பி.எல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இலங்கை அணியில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றேன். தற்போது இலங்கை அணியின் முக்கிய வீரராகவும் மாறி இருக்கிறேன். சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு. தோனி உடனான ட்ரஸ்ஸிங் ரூம் பகிர்வு என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இலங்கையிலிருந்து வருபவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் மிக முக்கியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.