< Back
கிரிக்கெட்
ஹர்ஷித் ராணாவை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யுங்கள் - தினேஷ் கார்த்திக்
கிரிக்கெட்

ஹர்ஷித் ராணாவை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யுங்கள் - தினேஷ் கார்த்திக்

தினத்தந்தி
|
17 Sept 2024 1:44 PM IST

ஹர்ஷித் ராணா மிகவும் திறமையான வேகப்பந்து வீச்சாளர் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் ஹர்ஷித் ரானாவை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த வீரரை வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே தேர்வு செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஹர்ஷித் ராணா அவருக்கு சிறப்பான திறமை இருக்கிறது. அவருடைய பந்துவீச்சில் நல்ல பேக் ஸ்பின் இருக்கிறது. சிறப்பான முறையில் பந்து பிட்ச்சில் லேண்ட் ஆகிறது. அவர் மிகவும் திறமையான வேகப்பந்து வீச்சாளர் எனவே அவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு கூட்டிச் செல்ல விரும்புகிறேன். அங்கு அவர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும் நம்புகிறேன்.

தற்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இந்திய அணியில் நான் திருப்தியாக இருக்கிறேன். ஆனாலும் ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்வார்கள் என நான் நினைத்தேன். அவர் சிறப்பாக பந்து வீசியதால் வாய்ப்பு கிடைக்கும் என்று தோன்றியது. ஆனால் இந்திய அணியில் சரியான 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்" என்று கூறினார்.

இவர் கூறுவது போலவே ஹர்ஷித் ராணா ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். மேலும் தற்போது நடைபெற்று வரும் துலீப் கோப்பை தொடரிலும் சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்