பெர்த் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா
|ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன் எடுத்து அவுட் ஆனார்.
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா தனது 2வது இன்ன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவஜா 3 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியினர் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர்.
இதன் காரணமாக கவாஜா 4 ரன், ஸ்மித் 17 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் டிராவிஸ் அரைசதம் அடித்து அசத்தினார். ஹெட் அரைசதம் அடித்த நிலையில் 89 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 47 ரன்னிலும் அவுட் ஆகினர்.
அடுத்து வந்த ஸ்டார்க் 12 ரன்னிலும், நாதன் லயன் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சில் 58.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 238 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.