< Back
கிரிக்கெட்
பெர்த் டெஸ்ட்; அஸ்வின், ஜடேஜா இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது - சுனில் கவாஸ்கர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

பெர்த் டெஸ்ட்; அஸ்வின், ஜடேஜா இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது - சுனில் கவாஸ்கர்

தினத்தந்தி
|
22 Nov 2024 12:11 PM IST

பெர்த் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடி வரும் இந்தியா தடுமாறி வருகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார்.

பெர்த் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜாவை காட்டிலும் வாஷிங்டன் சுந்தருக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை கழற்றி விட்டதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 900 விக்கெட்டுகளை ஜோடியாக எடுத்த அஸ்வின் மற்றும் ஜடேஜா விளையாடாதது உண்மையாக ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் இந்தியா அல்லது துணை கண்டத்தில் மட்டும் விளையாடக்கூடிய பவுலர்கள் கிடையாது. அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடிய சாதுரியமான அனுபவமிக்க பவுலர்கள். ஒருவேளை விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றால் கூட எதிரணியினர் ரன்கள் குவிக்கும் வேகத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியும். ஆஸ்திரேலியாவில் பெரிய பவுண்டரிகள் உள்ள மைதானங்கள் இருப்பதால் அவர்கள் இருவரும் விளையாடுவார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் இந்திய அணி புதிதாக சிந்திக்கிறது.

அவர்கள் நம்பிக்கையை தரக்கூடிய நிதிஷ் ரெட்டியை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதில் தவறு இல்லை. ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறாரா?. ஏனெனில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அதிகமாக விளையாடியதில்லை. தற்போதைய நிலைமையில் இந்திய ரசிகர்களைப் போலவே நிதிஷ் ரெட்டியும் நன்றாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்