கிரிக்கெட்
காயத்தால் அவதிப்படும் பேட் கம்மின்ஸ்... சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதில் சிக்கல்...?
கிரிக்கெட்

காயத்தால் அவதிப்படும் பேட் கம்மின்ஸ்... சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதில் சிக்கல்...?

தினத்தந்தி
|
10 Jan 2025 11:52 AM IST

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கான்பெர்ரா,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கலந்து கொள்வாரா? என கேள்வி எழுந்துள்ளது. கம்மின்சின் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது கணுக்காலில் ஏற்பட்ட காயம் குறித்து தெரிந்து கொள்ள ஸ்கேன் செய்யப்பட உள்ளது.

அதற்கு பிறகே கம்மின்ஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்பது உறுதியாகும். மேலும், ஆஸ்திரேலிய தேர்வுக்குழுத் தலைவரான ஜார்ஜ் பெய்லியும், பேட் கம்மின்ஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்வாரா என்பதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்