
கோப்புப்படம்
பேட்டிங் செய்தபோது களத்தில் மயங்கி விழுந்த பாக்.வம்சாவளி வீரர் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்

இவர் ரமலான் பண்டிகைக்காக நோன்பு கடைபிடித்துள்ளார்.
அடிலெய்டு,
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான் (வயது 40) விளையாடி கொண்டிருக்கும்போது மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சர்வதேச அளவில் விளையாடாத 40 வயதான ஜுனைத் ஜாபர் கான் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த அவர், அங்குள்ள ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிளப் அணிக்காக விளையாடி வந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு உள்ளூர் போட்டியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் 16 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜூனைத் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அந்த சமயத்தில் வெப்பத்தின் அளவு 41.7 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்துள்ளது.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர் ரமலான் பண்டிக்காக நோன்பு கடைபிடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி நடைபெற்ற சமயத்தில் வெறும் தண்ணீர் மட்டும் குடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.