< Back
கிரிக்கெட்
சதம் விளாசிய சாம் அயூப்: 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
கிரிக்கெட்

சதம் விளாசிய சாம் அயூப்: 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

தினத்தந்தி
|
18 Dec 2024 1:55 AM IST

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

பார்ல்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, பார்ல் நகரில் நேற்று இரவு தொடங்கி நடைபெற்றது.

பணிச்சுமை காரணமாக தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா முதலாவது ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மார்க்ரம் அணியை வழிநடத்தினார். இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலாவதாக பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக கிளாசென் 86 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக சல்மான் அகா 4 விக்கெட்டுகளும், அக்பர் அகமது 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் , தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சயிம் அயூப் 119 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்ததடுத்து விழுந்தநிலையில் சயிம் அயூப்புடன் இணைந்த சல்மான் அகா, தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் பார்ட்மென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்