ஆரஞ்சு தொப்பி மட்டும் உங்களுக்கு கோப்பையை பெற்று தராது - மீண்டும் ஆர்சிபியை விமர்சிக்கும் ராயுடு
|ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி வென்றார்.
மும்பை,
கடந்த 2 மாத காலங்களாக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது. அதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனால் 2012, 2014-க்கு பின் 3-வது கோப்பையை வென்ற கொல்கத்தா ஐ.பி.எல். தொடரில் அதிக கோப்பைகளை வென்ற 2-வது அணியாக (முதலிடத்தில் சென்னை மற்றும் மும்பை தலா 5 முறை) சாதனை படைத்துள்ளது.
இறுதியில் வெற்றி பெற்ற அணிக்கும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதில் 741 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்த விராட் கோலிக்கு ஆரஞ்சு தொப்பியுடன் ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் 2016-ம் ஆண்டு 973 ரன்கள் குவித்த விராட் கோலி ஏற்கனவே ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார். அதனால் இதையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 2 ஆரஞ்சு தொப்பிகளை வென்ற முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையின் விராட் கோலி படைத்தார்.
இந்நிலையில் ஆரஞ்சு தொப்பியை வென்றால் மட்டும் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியாது என்று அம்பத்தி ராயுடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியை மீண்டும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இந்த வருடம் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் சென்னையை தோற்கடித்து பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் பெங்களூரு அணியின் அந்த வெற்றியை ரசிகர்களும் வீரர்களும் வெறித்தனமாக கொண்டாடினர். ஆனால் அடுத்த போட்டியிலேயே எலிமினேட்டரில் ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூரு கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.
அப்போது சென்னையை தோற்கடித்து வெறித்தனமாக கொண்டாடுவதால் மட்டும் கோப்பையை வெல்ல முடியாது என்று ஆர்சிபி அணியை நேரடியாக விமர்சித்த ராயுடு சொந்த சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக விளையாட வேண்டுமென அறிவுரை வழங்கினார். அது ஆர்சிபி ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இறுதிப்போட்டியின் வர்ணனையில் ராயுடு புதிதாக பேசியது பின்வருமாறு:-
"கொல்கத்தா அணிக்கு வாழ்த்துகள். நரைன், ரசல், ஸ்டார்க் போன்ற நட்சத்திர வீரர்கள் உயர்ந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி தங்களுடைய அணியின் வெற்றிகளில் பங்காற்றினர். அப்படித்தான் நீங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும். இதை நாம் பல வருடங்களாக பார்த்து வருகிறோம். ஆரஞ்சு தொப்பி உங்களுக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்காது. ஆனால் நிறைய வீரர்கள் இணைந்து 300 ரன்கள் அடிப்பது போன்ற கூட்டணியான செயல்பாடுகள்தான் வெற்றியை பெற்றுக்கொடுக்கும்" என்று கூறினார்.