அவர்கள்தான் என்னுடைய சிறந்த நண்பர்கள் - முகமது ஷமி
|2019 உலகக்கோப்பை தொடரில் சில ஆட்டங்களில் அவரை அணியில் எடுக்காதது குறித்து முகமது ஷமி ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மும்பை,
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகள் என மூன்று வகையான அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளார். இவர் உலக கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். தற்போது காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி உள்ளார்.
முகமது ஷமி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட முகமது ஷமி கிரிக்கெட் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் 2019 உலகக்கோப்பை தொடரில் சில ஆட்டங்களில் அவரை அணியில் எடுக்காதது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அதேபேட்டியில் நான் காயம் அடைந்து சிகிச்சை மேற்கொண்டிருந்த சமயத்தில் விராட் மற்றும் இஷாந்த் சர்மா மட்டுமே எனக்கு போன் கால் செய்து நலம் விசாரித்தார்கள் என்றும், அவர்கள் எனது சிறந்த நண்பர்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நான் காயமடைந்து இந்திய அணியில் இருந்து வெளியேறிய பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். அதன் பிறகு தற்போது வரை பல மாதங்களாக ஓய்வில் இருக்கிறேன். ஆனால் இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இரண்டு நபர்கள் தான் தொடர்ச்சியாக எனக்கு போன் செய்து என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்தனர். அவர்கள் இருவரையும் என்னுடைய சிறந்த நண்பர்கள் என்று சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.