இதை செய்தால் மட்டுமே சச்சினின் உலக சாதனையை ஜோ ரூட் முறியடிக்க முடியும் - ரிக்கி பாண்டிங்
|டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை சச்சின் தன்வசம் வைத்துள்ளார்.
சிட்னி,
நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் சுமித் ஆகியோருடன் ஜோ ரூட்டும் உலகின் டாப் 4 சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அதிலும் விராட் கோலி, வில்லியம்சன், ஸ்மித் ஆகியோரை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடும் அவர், இதுவரை 12,027* ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார்.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜொலிக்கும் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை அவர் முறியடிக்கும் வாய்ப்புள்ளது. தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜோ ரூட் இன்னும் 4,000 ரன்கள் அடித்தால் 15921 ரன்கள் குவித்துள்ள சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைக்க முடியும். எனவே வருங்காலங்களில் சச்சின் டெண்டுல்கரின் இந்த உலக சாதனையை அவர் உடைப்பார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அதற்கு இங்கிலாந்து ஒவ்வொரு வருடமும் 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதில் ஜோ ரூட் 800 - 1000 ரன்கள் அடித்தால் சச்சினை முந்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் பாண்டிங் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
"33 வயதாகும் அவர் இன்னும் 4000 ரன்கள் பின்தங்கியுள்ளார். ஒரு வருடத்தில் இங்கிலாந்து 10 - 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் ரூட் 800 - 1000 ரன்கள் அடித்தால் 3 - 4 வருடத்திலேயே அங்கே செல்ல முடியும். அதற்கு 37 வயதாகலாம். அத்துடன் தற்போதுள்ள பார்ம் அப்படியே தொடர்ந்தால் அதற்கான சாத்தியம் உள்ளது. கடந்த சில வருடங்களாக ஜோ ரூட் தொடர்ந்து முன்னேற்றத்தை சந்தித்து வருகிறார்.
பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் 30 வயதின் ஆரம்பத்தில் உச்சத்தை தொடுவார்கள் என்று சொல்வார்கள். ஆரம்பக் காலங்களில் அரை சதத்தை அடித்த ரூட் அதை சதமாக மாற்றுவதற்கு தடுமாறினார். இருப்பினும் சமீப காலங்களில் பெரும்பாலான அரை சதங்களை அவர் பெரிய சாதமாக மாற்றுகிறார். அதுவே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது" என்று கூறினார்.