பும்ராவுக்கு பதிலாக இவர்களில் ஒருவரை டெஸ்ட் கேப்டனாக நியமிக்கலாம் - முகமது கைப்
|ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, அதன்பின்னர் பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இந்தியா தொடரை இழக்க விராட், ரோகித், சுப்மன் கில் போன்ற வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தாததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகினார். இதையடுத்து இந்திய கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா செயல்பட்டார். இந்திய அணி அடுத்ததாக வரும் ஜூன் மாதம் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட உள்ளது. எனவே, டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் செயல்படுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அதேசமயம், இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாக பும்ராவே செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவுக்கு பதிலாக அதிரடியாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் அடுத்த கேப்டனாக தகுதியானவர்கள் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஜஸ்ப்ரீத் பும்ரா வருங்காலங்களில் கேப்டன்ஷிப் பொறுப்பை எடுத்துக் கொள்ள மாட்டார். ரோகித் சர்மாவுக்கு பின் அவர் கேப்டனாக வருவது சரியான ஐடியா கிடையாது. ஏனெனில் தற்சமயத்தில் அவர் மட்டும் தான் ஒட்டுமொத்த பாரத்தையும் சுமந்து கொண்டு மற்ற பவுலர்களிடம் குறைவான ஆதரவை பெற்றுக்கொண்டு முழு மூச்சுடன் அணிக்காக பவுலிங் செய்கிறார்.
அதுவே தற்சமயத்தில் அவர் காயத்தை சந்திப்பதற்கும் ஒரு காரணமாகும். அவர் இவ்வாறு காயத்தை சந்திப்பது இது முதல் முறையும் அல்ல. எனவே பும்ரா கேப்டனாக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் போன்ற பேட்ஸ்மேன் கேப்டனாக விரும்புவதை நான் விரும்புகிறேன். அவர்கள் ஐ.பி.எல் தொடரில் கேப்டன்ஷிப் செய்துள்ளார்கள். எனவே அவர்களில் ஒருவர் கேப்டனாக செயல்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.