ஒருநாள் கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
|பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட், நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினர்.
டர்பன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 80 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் குவேனா மபகா 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 330 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த தென் ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 248 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கிளாசென் 97 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட், நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.