ஒருநாள் கிரிக்கெட்: கேப்டனாக 1000 ரன்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை
|வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 211 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
வதோதரா,
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்தது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 315 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 103 ரன்னில் சுருண்டு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 211 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் 34 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன் எடுத்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார் ஹர்மன்ப்ரீத் கவுர். இவர் கேப்டனாக 26 போட்டியில் மொத்தம் 1,012 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே மிதாலி ராஜ் (5319 ரன், 155 போட்டி) இம்மைல்கல்லை எட்டினார்.
ஒட்டுமொத்த இந்திய கேப்டன் பட்டியலில் 10-வது இடம் பிடித்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். முதல் மூன்று இடங்களில் எம்.எஸ்.டோனி (6,641 ரன், 200 போட்டி), கோலி (5,449 ரன், 95 போட்டி), மிதாலி ராஜ் (5,319 ரன், 155 போட்டி) உள்ளனர்.