விராட் கோலி குறித்து எதுவும் சொல்ல வேண்டியதில்லை - இந்திய அணியின் கேப்டன்
|ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்படுவதற்கான அறிகுறிகள் விராட் கோலி எடுத்த கடுமையான பயிற்சிகளில் பார்த்ததாக பும்ரா கூறியுள்ளார்.
பெர்த்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய வீரர்கள் பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசியாக தங்களுடைய சொந்த ஊரில் நடைபெற்ற 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. எனவே இம்முறை எப்படியாவது இந்தியாவை தோற்கடித்து தொடரை வெல்ல ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. மறுபுறம் சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் பார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்படுவதற்கான அறிகுறிகள் விராட் கோலி எடுத்த கடுமையான பயிற்சிகளில் பார்த்ததாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலியை பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் நம்முடைய விளையாட்டின் ஒரு சிறந்த வீரர். அவருக்கு எந்த ஸ்பெஷலான உள்ளீடுகளையும் நான் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர் எங்களுடைய லீடர்களில் ஒருவர். அவருக்கு கீழ்தான் நான் இந்தியாவுக்காக விளையாட அறிமுகமானேன். அவருக்கு நாம் என்ன செய்கிறோம் என்பது தெரியும்.
உங்களுடைய கெரியரில் ஒரு சில தொடர்களில் மேடு பள்ளங்கள் அமையும். அது பரவாயில்லை. ஆனால் தற்சமயத்தில் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் தயாராகும் விதத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றுவதற்காக காத்திருக்கிறார். அவர் சிறப்பாக செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதைப்பற்றி அதிகமாக சொல்லி நான் பாழ்படுத்த விரும்பவில்லை. விராட் கோலி தற்போது நல்ல வடிவத்தில் தெரிகிறார்" என்று கூறினார்