
அணியின் நலனை விட வேறு எதுவும் பெரிது கிடையாது - பாபர் அசாமை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்

தான் பாபர் அசாமின் மிகப்பெரிய ரசிகன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
சென்னை,
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் முதல் பவர் பிளே ஓவர்களில் ரன் குவிக்காதது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் 321 ரன்கள் இலக்கை துரத்தும்போது 90 பந்துகளை எதிர்கொண்டு 64 ரன் மட்டுமே அடித்தது தோல்விக்கு முக்கிய காரணமாய் அமைந்தது. இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அணியின் நலனை விட உங்கள் பெயர் ஒன்றும் பெரிது கிடையாது என பாபர் அசாமை இந்திய முன்னாள் வீரரான அஸ்வின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பாபர் அசாமின் மிகப்பெரிய ரசிகன் நான். ஆனால் தங்களுடைய பெயரை காப்பாற்ற வேண்டும் என்று இது போன்ற ஆட்டத்தை விளையாடுவதில்தான் பிரச்சினையே தொடங்குகிறது. அணியின் நலனை விட உங்கள் பெயர் ஒன்றும் பெரிது கிடையாது. பாபர் அசாம் விளையாடிய விதம் உண்மையிலேயே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஏனெனில் ரன் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் விளையாடவில்லை. அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அவர் நினைக்கவில்லை.
அவர் விளையாடிய விதத்தை பார்க்கும்போது அவரிடம் ரன் ஸ்கோரிங் ஷாட்களே இல்லாத போன்று இருந்தது. இப்படி ஒரு ஆட்டத்தை நான் கடந்த பல ஆண்டுகளாக பார்த்ததே இல்லை. முதல் 10 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும்தான் அடிக்கிறீர்கள் என்றால் அது என்ன ஆட்டம் என்பதும் புரியவில்லை. அவர் நிச்சயம் பார்மில் இல்லை என்பது அதன் மூலம் தெரிகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெகு சில போட்டிகளே (லீக் சுற்றில் 3 போட்டிகள்) இருக்கும் வேளையில் அவர் இப்படி விளையாடுவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்" என்று கூறினார்.