நடராஜனை எடுக்காதது எங்களுக்கு பெரிய இழப்பு - பயிற்சியாளர் வெட்டோரி
|ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது
ஜெட்டா,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்தன.
ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். இதில் மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியானது சில முக்கிய வீரர்களை விலைக்கு வாங்கி ஆச்சரியப்படுத்தியது.
ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாகவே அந்த அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை அவர்கள் வாங்காமல் விட்டனர். நடராஜனை அவர்கள் வாங்காமல் விட்டது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது. இருந்தாலும் நடராஜன் டெல்லி அணியால் வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் நடராஜனை வாங்க முடியாதது குறித்து பேசியுள்ள சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறியதாவது, நடராஜனை வாங்காமல் விட்டது நிச்சயம் எங்களுக்கு இழப்புதான். அவரைப் போன்று ஒரு வீரரின் இடத்தை நிரப்புவது கடினம். இருந்தாலும் ஏலத்தின் முதல் பாதியிலேயே முகமது ஷமி, ஹர்ஷல் படேல் போன்ற வீரர்களின் பெயர்கள் வந்தபோது அவர்களை வாங்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தோம். அதன் காரணமாக அவர்களை வாங்கினோம்.
அதோடு அவர்களுக்கான விலையும் குறைவு என்பதனாலேயே அதனை கருத்தில் கொண்டு அந்த முடிவுகளை எடுத்தோம். பின்னர் நடராஜனுக்கு செல்லும் முன்னர் பல்வேறு நிலைமைகளை யோசிக்க வேண்டிய சூழலுக்கு வந்துவிட்டோம். இந்த இடத்தில் கையிருப்பு பணம் முக்கியம் என்பதனாலும், மேலும் ஒரு சில காரணங்களாலும் எங்களால் நடராஜனை வாங்க முடியாமல் போனது. இவ்வாறு அவர் கூறினார்.