கோப்பையை வழங்க அழைக்கவில்லை - சுனில் கவாஸ்கர் அதிருப்தி
|பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் மீண்டு வந்து தொடரை 3-1 என்ற கணக்கில் (ஒரு போட்டி டிரா) கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் சொந்த மண்ணில் கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் கண்ட தோல்விக்கு தற்போது கம்மின்ஸ் தலைமையில் பதிலடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வழங்க தன்னை அழைக்கவில்லை என இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்ற வெற்றியாளருக்கு கோப்பையை வழங்குமிடத்தில் இருப்பதை கண்டிப்பாக விரும்பியிருப்பேன். எல்லா விஷயங்களையும் கடந்து, இது பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன.
நான் மைதானத்தில்தான் இருந்தேன். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால், நான் கோப்பையை வழங்க விரும்பமாட்டேன் என்றெல்லாம் கிடையாது. அவர்கள் நன்றாக விளையாடியதால், வெற்றி பெற்றார்கள். இந்தியராக இருப்பதால், ஆலன் பார்டருடன் இணைந்து கோப்பையை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.