விராட் இல்லை.. இந்தியாவின் புதிய கிங் அவர்தான் - ஆஸி. முன்னாள் வீரர் விமர்சனம்
|விராட் கோலியின் கிங் என்ற பட்டம் ஆஸ்திரேலியாவில் இறந்ததாக சைமன் கேட்டிச் விமர்சித்துள்ளார்.
மெல்போர்ன்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி முடிவடைந்துள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற அந்த போட்டியில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியும், ஒரு டிராவும் கண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங்கில் ரன் குவிக்காத முன்னணி வீரரான விராட் கோலியும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறார். அவர் இந்தத் தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்து வெற்றியிலும் பங்காற்றினார். இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தார்.
அதனால் அவருக்கு சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர். இருப்பினும் விராட் கோலி இந்தப் போட்டியிலும் ஸ்டார்க் வீசிய அவுட் சைட் ஆப் பந்தில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவில் விராட் கோலி சிறப்பாக விளையாடியதால் அங்குள்ளவர்கள் அவரை கிங் என்று அழைப்பது வழக்கமாகும். ஆனால் தற்போது விராட் கோலியின் கிங் என்ற பட்டம் ஆஸ்திரேலியாவில் இறந்ததாக முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் விமர்சித்துள்ளார். மேலும் தற்போது பும்ராதான் இந்தியாவின் கிங் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "கிங் இறந்துள்ளார். ஸ்டார்க் துள்ளிக் குதிக்கிறார். கிங் என்ற பட்டத்தை தற்போது பும்ரா எடுத்துள்ளார். விராட் கோலி தடுமாறுகிறார். இங்கே அவருக்கு ஒரு பெரிய இன்னிங்ஸ் தேவைப்பட்டது. ஆனால் அவர் குறுகிய நிலைக்கு வந்துள்ளார். ஆஸ்திரேலியர்கள் அவருடைய நிலையால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்று கூறினார்.