எந்த தொடரும் ஆஷசை நெருங்க முடியாது - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து
|இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது.
பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோற்றதில்லை என்ற சிறப்புடன் ஆடி வருகிறது. அதனால் நவீன கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு சமமாக இந்திய அணியும் ஆஸ்திரேலியாவுக்கு போட்டியை கொடுப்பதாக பலரும் கருதுகிறார்கள். அதனால் ஆஷஸ் தொடருக்கு நிகராக இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை போட்டி உள்ளதாக கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில் அதை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் முற்றிலும் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த தொடர் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டி என்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் சில பேச்சுக்கள் காணப்படுகின்றன. அதை நான் மறுக்கிறேன். வரலாறு என்று வரும் போது எதுவும் ஆஷஸ் தொடரை நெருங்க முடியாது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே 150 வருடங்கள் கொண்ட பாரம்பரியமும், போட்டியும் இருந்து வருகிறது.
1980-களில் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது போல இந்த தலைமுறையில் இந்தியா விளையாடும் தொடர் சிறப்பாக உள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுமாராக விளையாடுவதால் நாம் அதைப் பற்றி பேசுவதில்லை. எனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதே போன்ற போட்டியை இன்னும் சில தலைமுறைகளாக தொடர வேண்டும். அதன் பின் வேண்டுமானால் நாம் அதை சிறந்த போட்டி என்று சொல்லலாம்.
ஆனால் இப்போது அதை ஏற்றுக் கொள்ளாமல் இடைவெளி விடுங்கள். தற்சமயத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தொடர்ச்சியாக அசத்தி வருகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒருதலைப் பட்சமாக நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த 4 தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது. அதில் இந்தியா முன்னிலையில் இருந்தாலும் அந்த முடிவுகள் 2 அணிகளுக்கும் இடையே நல்ல போட்டி இருக்கிறது என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.